
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.
இரண்டாண்டு கால இடைவேளைக்கு பின் பாகிஸ்தான் அணியுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறது இந்திய அணி. கடைசியாக 2015-ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது இந்திய அணி. அந்தப் போட்டியில் வென்ற இந்திய அணி, உலகக்கோப்பையில் பாகிஸ்தானை ஆறாவது முறையாக தோற்கடித்த சாதனையை படைத்தது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் இந்திய அணிக்கு சவாலாகவே விளங்குகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பையில் இரு அணிகளும் மூன்று போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் இரண்டு முறையயும், இந்திய அணி ஒரு முறையும் வென்றுள்ளன. 2004-ஆம் ஆண்டு பிர்மிங்க்ஹாம் நகரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாத்தில் வென்றது. 2009-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் பிர்மிங்க்ஹாம் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிர்மிங்க்ஹாம் மைதானத்தில் மூன்றாவது முறையாக பலப்பரீட்சை நடத்த இரு அணிகளும் காத்திருக்கின்றன.
‘இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு எளிதானது தான்’ என பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் சவால் விட்டிருப்பதும், ‘பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடவில்லை’ என கேப்டன் கோலி கூலாகக் கூறியிருப்பதும் போட்டியை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.
பாபர் ஆசம், ஹாரிஸ் சோகைல், ஹசன் அலி, ஷதாப் கான், ஃ பாஹிம் அஷ்ரப் ஆகிய இளம் வீரர்களை நம்பியிருக்கிறது பாகிஸ்தான் அணி. சோயப் மலிக், வகாப் ரியாஸ், முஹமது அமீர். முஹமது ஹஃபீஸ் ஆகிய அனுபவ விரர்களும் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளை கிறங்கடித்த இந்திய அணி, அதே வேகத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.