
உடல்நலக்குறைவுக்குப் பின்னர் ஓய்வில் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி இடம்பெற்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில், வைரவிழா மலரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியிடம் காண்பிக்கிறார். அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அவர் பக்கம் தோறும் பிரித்து காண்பிக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அவருடன் உதவியாளர் சண்முகநாதன், முரசொலி ஆசிரியர் சேது ஆகியோர் இருந்தனர். மூச்சுத் திணறல், சளி தொந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வுக்குப் பின்னர் கருணாநிதி இருப்பது போன்ற புகைப்படங்களே வெளியிடப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. கருணாநிதி 94ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.