[X] Close

மருத்துவமனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Women-raped-in-Hospital

மருத்துவமனை வளாகத்தில் பெண் ஒருவர் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது, கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம். இங்கு ஹர்டோய் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், உடல் நலமில்லாத தனது கணவரைச் சேர்க்க புதன்கிழமை இரவு வந்தார். அவர்கள் பார்க்க வேண்டிய டாக்டர் மறுநாள்தான் வருவார் என்பதால் அன்று இரவு மருத்துவமனையில் தங்க முடிவு செய்தனர். அதன்படி மருத்துவமனை வராண்டாவில் தங்கினர். இரவு பத்து மணியளவில் மருத்துவமனை செக்யூரிட்டி சிவகுமார் என்பவர், ‘எதற்காக இங்கு தங்கியிருக்கிறீர்கள்’ என்று அவர்களிடம் விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்.

அரை மணி நேரம் கழித்து வந்த சிவகுமார், ‘கேன்டீனில் சாப்பாடு இருக்கிறது. நீ மட்டும் வா, பார்சல் வாங்கி தருகிறேன்’ என்று அழைத்திருக்கிறார் அந்தப் பெண்ணை. அதை உண்மை என்று நம்பி அவனுடன் சென்றாள். நான்காவது மாடியில் கேன்டீன் இருந்தது. இதற்காக லிப்டில் ஏற்றி அங்குள்ள மெஷின் அறைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஏற்கனவே மற்றொரு செக்யூரிட்டியான சந்தோஷ், லிஃப்ட்மேன் வினய் ஆகியோர் இருந்தனர். மூவரும் அந்தப் பெண்ணை மிரட்டி, மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின் காரியம் முடிந்ததும் அவர்கள் சென்றுவிட்டனர்.


Advertisement

இதையடுத்து தள்ளாடியபடியே வெளியே வந்த அந்தப் பெண் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் கணவரிடம் கூறினார். பின்னர் அங்கு வந்த சிவகுமார், 25 ஆயிரம் ரூபாய் தருகிறோம், நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டினார். அதை அவர்கள் நிராகரித்ததால் மருத்துவமனையை விட்டு வெளியே விரட்டினர். இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் சிவகுமாரை கைது செய்தனர். அந்தப் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனை வளாகத்திலேயே பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close