Published : 18,Dec 2019 03:50 AM

“எனக்கு இது மாபெரும் மரியாதை” - காஜல் அகர்வால் சந்தோஷம்

I---m-grateful-for-the-honour--Kajal-Aggarwal

நடிகை காஜல் அகர்வால், தான் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகம் அறியப்பட்ட நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித், தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதே சமயம் தெலுங்கு பட உலகிலும் இவர், பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு வரும் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் ஒரு சிலை நிறுவப்பட உள்ளது.

இதற்கு முன்பு அங்கு பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சான், ஷாருக் கான், மாதுரி தீட்சித் என பலருக்கும், கூடவே விளையாட்டு உலகில் பிரபலமாக திகழ்பவருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காஜல் அகர்வாலுக்கும் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக அவரை அளவு எடுக்கும் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் நானும் எனது உடல்பாகத்தின் பாதியும் சேர்ந்து உங்களை சந்திக்க இருக்கிறோம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி இதற்காக நடைபெறும் விழாவில் காஜல் கலந்து கொண்டு சிலையை திறக்க இருக்கிறார்.

“கடந்த மார்ச் மாதமே இதற்கான தகவல் எனக்குக் கிடைத்தது. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நான் அமைதி காத்தேன்” எனக் கூறியுள்ள காஜல், “அதன் பின் ஒரு மாதம் கழித்து என் உடலை அளவெடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினேன். அடுத்த வருடம் பிப்ரவரியில் எனது மெழுகு சிலை திறக்கப்பட உள்ளது” எனக் கூறியுள்ளார்.

“ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போதுதான் இது பற்றிய தகவலை நான் அறிந்தேன். என் பெற்றோரும் எனது சகோதரியும் இதற்கான தகவலை தொலைப்பேசியில் கூறினார்கள். நான் சிறு குழந்தையாக இருக்கும்போது லண்டனில் உள்ள  ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு சிலை அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறேன். இப்போது அடுத்த வருடம் என் சிலைக்காக சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறேன்.

இந்தச் சிலை அமைக்கப்பட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியானபோது ஆச்சரியமாக இருந்தது. பல துறை ஆளுமைகள் இருக்கும் அந்த மெழுகு சிலை அரங்கை நானும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியான ஒரு உணர்வு” என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு கொடுத்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

என்ன மாதிரியான சிலை அது? என்ற கேள்விக்கு அவர், “இப்போதைக்கு வெளிப்படையாக சொல்ல முடியாது. சிலைக்கான வடிவத்தை நானே தேர்தெடுத்தேன். என்னை அளவெடுத்த ஒருநாள் முழுவதும் எனக்குப் பிடிக்கும்படி இருந்தது” என கூறியுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்