[X] Close

சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு இதுதான் காரணமாம்..!

chennai-silk-fire-accident-due-to-electrical-discharge

சென்னை தியாகராய நகரில் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்‌ட தீ விபத்துக்கு ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு தான் காரணம் என தெரிய வந்துள்ளது.


Advertisement

சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பெரும் தீ விபத்து இன்று காலை ஏற்பட்டது. காலை 4.45 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 8 மணி நேரமாகியும் இன்னும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை. கடைக்குள் சிக்கியிருந்த 14 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, தீ விபத்து ஏற்பட்டுள்ள "சென்னை சில்க்ஸ்" அமைந்துள்ள இடம் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களு‌க்கு பேட்டி அளித்த அவர், தீ விபத்தி‌ல் உயிர் சேதம்‌ ஏதும் ஏற்படவில்லை என்றார். தீயை அணைக்க 50 லா‌ரிகளில் தண்ணீர் தயாராக உள்ளது என்றும் புகைமூட்டம் அதிகமாக இருப்பதால்‌ தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்.


Advertisement

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்‌ட தீ விபத்துக்கு ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு தான் காரணம் என தெரிய வந்துள்ளது. மின்கசிவோடு அருகில் இருந்த டீசல் கேன் வெடித்ததால் தீ வேகமாக பரவியதும் தெரிய வந்திருக்கிறது. இதனிடையே, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், விபத்து ஏற்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க வேண்டாம் என்றும் வேடிக்கை பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனும் தீ விபத்து நேர்ந்த இடத்தில் ஆய்வு செய்தார்.


Advertisement

Advertisement
[X] Close