Published : 30,May 2017 04:35 PM

பட்டப்பகலில் படுகொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Chennai-Murder-CCTV--Footage-release

சென்னையில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவரான முகமது ஹனீஃப் என்பவர், ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் செயல்பட்டு வந்தார். பிற்பகலில், தொழுகை முடிந்து இருசக்கர வாகனத்தில் அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சாலை மறைவிலிருந்து ஓடிவந்த நபரை கண்டு தனது வாகனத்தை நிறுத்திய ஹனீஃப் கீழே விழுந்தார். அப்போது ஹனீபை அந்த நபர், சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹனீஃப், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நிகழ்விடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் காவல்நிலைய போலீசார், பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளன. அதில், ஹனீஃபை நெருங்கும் நபர், சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவது பதிவாகியுள்ளது. இந்த காட்சியை முக்கிய ஆதரமாக கைக்கொண்டுள்ள காவல்துறையினர், கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்