Published : 30,May 2017 02:36 PM
கோலி-கும்ப்ளே இடையே மோதல்?... இந்திய அணிக்கு புதிய சிக்கல்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியாளரான கும்ப்ளே வீரர்களைக் கையாளும் முறை குறித்து கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டிய சூழலில் உள்ளது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளநிலையில், இந்த மோதல் இந்திய அணிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருவரிடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைய பிசிசிஐ-யின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் தீவிர முயற்சி செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டிரிக்ட் மாஸ்டராக அறியப்படும் கும்ப்ளேவின் அணுகுமுறையை விரும்பாத சீனியர் வீரர்கள், முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் அணுகுமுறையே சிறந்ததாகக் கருதுகின்றனராம். இதனால், ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியை மீண்டும் ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையும் வீரர்களிடையே எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் கலந்துகொள்ளவே ரவி சாஸ்திரிக்கு விருப்பம் இல்லையாம். அதேபோல பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவாக்கிடம் பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், அந்த வேண்டுகோளினை அவர் நிராகரித்து விட்டதாகவும் தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.