[X] Close

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

tamil-nadu-Local-Body-election-case-case-to-be-heard-in-Supreme-Court-today

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

தொகுதி மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்காமலேயே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகியுள்ளதால், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இட ஒதுக்கீட்டு பணிகள் உள்ளிட்டவற்றை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைப் பணிகள் முடிக்கவில்லை எனவும் திமுக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அபிசேக் சிங்வி குற்றம்சாட்டினார். 


Advertisement

மறுவரையறை, இடஒதுக்கீடு பணிகள் முடிந்து விட்டதாகவும், புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை பணிகளை செய்ய வேண்டியதில்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையத்துக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகளை முடிக்காவிடில் குழப்பம் ஏற்படாதா? எனவும், புதிய மாவட்டங்களால் எல்லைகள் மாறுபடும் நிலையில், தொகுதி மறுவரையறை முடிந்தது என எப்படி கூறலாம்? எனவும் வினவினர். 

மேலும் உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் ஏன் மாவட்டங்களை பிரித்தீர்கள்? எனவும், இதுபோன்ற குழப்பத்தை தவிர்க்க புதிய மாவட்ட அறிவிப்பை திரும்ப பெறுகிறீர்களா? எனவும் அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முறையான விதிகளை பின்பற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை தங்களால் நிறுத்தி வைக்க முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து பதில் அளித்த தமிழக அரசு, தொகுதி மறுவரையறை செய்யவில்லை என நினைத்தால் புதிய 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வையுங்கள் என கேட்டுக்கொண்டது. 


Advertisement

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு, தடை விதித்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தமாக தடை விதியுங்கள், இல்லாவிடில் குழப்பம் ஏற்படும் எனக் கூறியது. இதைத்தொடர்ந்து புதிய 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்க தயார் எனக் கூறியது. இந்தக் கருத்தை பரிசீலிப்பதாக கூறிய நீதிபதிகள், தீர்ப்பை நாளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close