Published : 02,Dec 2019 07:25 AM
கோவையில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : கேரள முதல்வர் இரங்கல்

கோவையில் வீடுகள் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதன்படி கோவை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், நடூர் என்ற இடத்தில் ஏடி காலனியில் இருக்கும் 4 வீடுகள் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தன. அப்போது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். பொதுமக்களின் உதவியோடு 17பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் கோவையில் வீடுகள் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே: மழை பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் - மாநகராட்சி அறிவிப்பு