Published : 30,May 2017 04:17 AM
அடப்பாவிகளா: மாடியில் இருந்து மாணவியை வீசிய ஆசிரியர்கள்

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பறையை சுத்தம் செய்யாத மாணவியை ஆசிரியர்கள் பள்ளியின் மேல் தளத்திலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், லாகூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது மாணவி பஜ்ஜர் நூர். இவரை தனது பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி ஆசியர்களான புஷ்ரா மற்றும் ரெஹானா ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றொரு நாளில் வகுப்பறையை சுத்தம் செய்வதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர்கள், மாணவி பஜ்ஜர் நூரை அருகில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்து சென்று அவரை தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, பள்ளியின் மேல்தளத்திலிருந்து தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இரண்டு ஆசிரியர்களும், இந்த சம்பவத்தை மறைத்ததற்காக பள்ளியின் தலைமை ஆசிரியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.