[X] Close

’என் மகளை கொன்னவங்களை உயிரோட எரிக்கணும்’: பிரியங்காவின் அம்மா ஆவேசம்!

Hyderabad-rape-case--Burn-the-culprits--says-veterinarian---s-Mother

’என் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்களை உயிரோடு எரித்துக்கொல்ல வேண்டும்’ என்று பிரியங்காவின் தாய் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கால்நடை மருத்துவரான இவர், கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம். 


Advertisement

கடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த‌ருக்கிறார். 6 மணியளவில் அங்கு வண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற பிரியங்காவை, ஒரு கும்பல் நோட்டமிட்டது. மதுபோதையில் இருந்த அவர்கள், பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் டயரை பஞ்சராக்கியது. அவர் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது. இரவு ஒன்பது இருபது மணிக்கு சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த பிரியங்கா, இருசக்கர வாகனத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வண்டி பஞ்சர் ஆகியிருப்பதால் அதை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்டார். இதை வீட்டில் இருந்த தனது சகோதரிக்கு போனில் கூறியுள்ளார். தன்னை லாரி ஓட்டுநர்கள் 4 பேர் பின் தொடர்வதாகவும் பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மது போதை கும்பலைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முகமது அஷாவும், கிளீனர் சிவாவும் உதவுவதாக பிரியங்காவிடம் கூறியுள்ளனர். அவர் சரி என்று சொல்லவும் ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சின்னகேசவலு, நவீன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.


Advertisement

பிரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு எடுத்துச் கொண்டு கட்டபள்ளி என்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்குள்ள பாலத்தின் அடியில் வைத்து பிரியங்காவின் சடலத்தை தீயிட்டு கொளுத்திய நால்வரும், தப்பிச் சென்றுள்ளனர். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் தான் குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்த சைபராபாத் காவல்துறை அவர்களை கைது செய்திருக்கிறது.

இந்நிலையில் தன் மகளை கொடூரமாகக் கொன்றவர்களை எல்லோர் முன்பும் எரித்துக்கொல்ல வேண்டும் என்று பிரியங்காவின் தாய் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

‘என் மகள் பிரியங்கா, தங்கச்சிக்கு போன் பண்ணி சொன்ன விஷயம் எனக்குத் தெரியாது. வண்டி பஞ்சர் ஆனதோ, நாலு பேர் பின் தொடர்ந்து வந்தது பற்றி அவள் சொன்னதோ எனக்குத் தெரியாம போயிடுச்சு. ராத்திரி 10 மணிக்கு போன் ரீச் ஆகலைன்னதும் என் சின்ன மகள், ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா. அவங்க சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்தாங்க. அதுல கச்சிபவுலி நோக்கி என் மகள் போறது தெரிஞ்சுது. அதனால அவங்க, சம்ஷாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக சொன்னாங்க. அவங்க எங்ககிட்ட விசாரணை நடத்தின விதம் ஏத்துக்க முடியாததா இருந்தது. பிறகு சம்ஷாபாத் போலீஸ் ஸ்டேஷன் போனோம். ரொம்ப நேரத்துக்குப் பிறகு 2 போலீஸை எங்களோட அனுப்பினாங்க. நாங்க என் மகள், வண்டியை தள்ளிட்டு வந்ததா சொன்ன இடங்கள்ல தேடினோம். அதிகாலை 4 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியலை... எம் மகள் அப்பாவி...’’ என்று கண்ணீர் விட்ட அவரது அம்மா, ‘என் மகளை கொன்னவங்களை எல்லார் முன்னாலயும் உயிரோட கொளுத்தணும்’ என்று கதறினார். 

’’இந்த போலீஸ் ஸ்டேஷன், அந்த போலீஸ் ஸ்டேஷன்னு அலைஞ்சதுலயே 3 மணி நேரம் வீணா போச்சு. அவங்க நேரத்தை வீணாக்காம உடனடியா நடவடிக்கையில இறங்கியிருந்தா, என் அக்காவை காப்பாற்றி இருக்கலாம்’’ என்று கண்ணீர் விடுகிறார் அவர் சகோதரி.

‘இந்த விவகாரத்தில் போலீசார் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறது சைபராபாத் காவல்துறை.
 


Advertisement

Advertisement
[X] Close