கடல்நீரை பயன்படுத்தி விவசாயம் : வறட்சியை சமாளிக்க மாற்று வழி

கடல்நீரை பயன்படுத்தி விவசாயம் : வறட்சியை சமாளிக்க மாற்று வழி
கடல்நீரை பயன்படுத்தி விவசாயம் : வறட்சியை சமாளிக்க மாற்று வழி

கடல்நீரை கொண்டு விவசாயம் செய்யும் முறை ஸ்காட்லாந்தில் பிரபலமாகி வருகிறது. 

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயமே. இதனை சரி செய்ய மாற்று வழியை நாடியுள்ளது பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம். சர்வதேச அளவில் வேளாண்மைக்கு தேவையான புதிய கருவிகளும் தொழில்நுட்பங்களும் கண்டறியப்பட்டாலும், அடிப்படை தேவையான தண்ணீர் கிடைக்காமல் பல்வேறு நாடுகளிலும் விவசாயிகள் திணறி வருகின்றனர். பூமியில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பது கடல் நீர். 

இந்த நீரை கொண்டு விவசாயம் செய்தால் என்ன என்ற யோசனைக்கு உயிர் கொடுத்துள்ளது பிரிட்டனை சேர்ந்த ‘Seawater Solutions’ நிறுவனம். இதற்காக இவர்கள் ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரை பகுதியை தேர்வு செய்தனர். கடலுக்கு அருகே இருப்பதாலும் உப்பு காற்று நிறைந்த இடம் என்பதாலும் விவசாயத்திற்கு தகுதியான இடமில்லை என கருதப்பட்ட இடத்தில் விவசாய நிலத்தை அமைத்து கடல்நீரில் கூட தாக்குப்பிடித்து வளரும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். கடலில் இருந்து தண்ணீர் குழாய்கள் மூலம் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு நாளைக்கு இரண்டு முறை கடல்நீர் கொண்டு வரப்பட்டு நிலத்தில் நிரப்பப்படுகிறது. பிரிட்டன் மக்களால் அதிகம் விரும்பப்படும் சம்பைர் (SAMPHIRE) தண்டுகள், சீ பிலைட் (sea blite) தாவரம், முட்டைகோஸ் உள்ளிட்டவை இந்த நிலத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கான செலவும், வேலைகளும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. கடல்நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் செய்யப்படும் இந்த வகை விவசாயம், தற்போது சிறிய பரப்பில் தொடங்கப்பட்டிருந்தாலும் வருங்காலங்களில் இது பெருமளவில் விரிவுபடுத்தப்படும் என நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com