
ஓசூரில் கை குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக கை குழந்தை உயிர் தப்பியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை குழந்தையுடன் பெங்களூரை நோக்கி செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அதிர்ஷ்ட வசமாக 10 மாத பெண் குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. ஆனால் அந்த பெண் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் காயங்களுடன் உயிர் தப்பிய கை குழந்தையை மீட்டு சிகிச்சைகாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.