
தான் இன்னும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் உள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேசியவாத கட்சியின் எம்.எல்.ஏ அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். சரத் பவார் தான் எங்கள் கட்சியின் தலைவர்.
பாஜக-தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை வழங்கும். இந்தக் கூட்டணி மக்களின் நலனுக்காக பாடுபடும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்து செய்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.