Published : 21,Nov 2019 05:17 AM
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன: சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக 105 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றிகண்டன. பாஜக, சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்சி அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, ஆட்சியில் சரிபங்கு என சிவசேனா பிடிவாதத்துடன் இருந்ததால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கான சூழல் இல்லை எனக்கூறி, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சர் பதவியை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனாவும் அடுத்த இரண்டரை வருடங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, ‘’அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் இந்த பணி முடிவடையும். இதுபற்றி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்பையில் சந்தித்துப் பேச இருக்கின்றன’ என்றார்.