Published : 28,May 2017 08:20 AM
அமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட இருவர் குத்திக்கொலை

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் மேக்ஸ் ரயிலில் பயணம் செய்த முஸ்லிம் பெண்களை இனவெறியோடு பேசி வம்பு இழுத்துள்ளார். அதை ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் சிலர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த நபர், 2 பேர் குத்திக்கொலை செய்துவிட்டார். மேலும் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் போர்ட்லேண்ட்டில் பயணிகள் செல்லும் ரயிலில் 2 முஸ்லிம் பெண்கள் பயணம் செய்தனர். ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியன் (35) என்ற வாலிபர் அந்த முஸ்லிம் பெண்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசி வம்பு செய்தார். அதை ரயிலில் பயணம் செய்த சிலர் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியன் தான் வைத்திருந்த கத்தியால் 3 பேரை சரமாரியாக குத்தினார். அதில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஓடும் ரயிலில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் கொலையாளி ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியனை கைது செய்தனர்.
இதுகுறித்து அமெரிக்க இஸ்லாமிய சமூக கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “2015 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து டொனால்டு டிரம்ப் தீவிரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினார். அன்று முதல் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கு 50 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.