Published : 16,Nov 2019 01:20 PM

‘கணவன் உயிருக்கு ஆபத்து..தோஷம் கழிக்க வேண்டும்’ - மோசடி கும்பலிடம் நகைகளை ஏமாந்த பட்டதாரிப்பெண்

Woman-cheated-of-jewels-by-black-magic-cheaters

கணவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தோஷம் கழித்தால் சரியாகும் எனவும் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் பட்டதாரி இளம்பெண் ஒருவர் நகைகளையும், பணத்தை இழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் பயிற்சி பயின்ற பட்டதாரி இளம் பெண் செபியா மேரி (28). இவர் கூலித் தொழிலாளியான தனது கணவர் பெனிராஜன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டருகே கொட்டகை ஒன்றில் கடந்த பத்து நாட்களுக்கு முன் வீடுகளுக்கு சென்று குடுகுடுப்பை அடித்து குறி சொல்வதாக கூறி 2 ஆண்கள், 2 பெண்கள் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் கொண்ட குழு குடும்பத்தோடு வந்து முகாமிட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மாலை குடும்பத்தாருடன் செபியா மேரி வீட்டிற்கு வந்த அவர்கள், ஊர் ஊராக சென்று குடுகுடுப்பை அடித்து குறி சொல்லி மக்களின் தோஷங்களை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளனர். பின்னர் செபிலா மேரியின் கணவரின் கைகளை பார்த்து குறி சொல்லியுள்ளனர்.

பின்னர், கணவருக்கு குடும்ப தோஷத்தால் உயிருக்கு ஆபத்து  என்றும் உடனடியாக பூஜைகள் செய்து தோஷம் தீர்த்தால் ஆபத்தில் இருந்து தப்பி விடலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும்  பூஜையால் பெரும் செல்வந்தர் ஆகலாம் என்றும் செபியா மேரியிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். முதலில் பூஜை செலவுக்காக 2500 ரூபாய் வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பிய செபியா மேரி பணத்தை கொடுக்கவே, மஞ்சள் துணி மற்றும் சிறிய அளவிலான மண் கலசம் ஒன்றையும் கொடுத்து நாளை மாந்திரீக பூஜை நடைபெறும் என்றும் அதற்கு முன் வீட்டில் உள்ள ஒவ்வொரு நபர்களின் நகைகளையும் மஞ்சள் துணியில் போட்டு கலசத்துக்குள் வைத்து விடுங்கள் நாளை வந்து பூஜைகளை நடத்தி தோஷத்தை தீர்த்து வைப்பதாகவும் கூறி அவர்கள் சென்றுள்ளனர்.

செபியா மேரியும் அவர்கள் சொன்னது போல் குழந்தைகளின் நகை மற்றும் தனது தாலி சங்கிலியுடன் பத்து சவரன் நகைகளை அதில் வைத்துள்ளார். மறுநாள் (வியாழக்கிழமை) வந்த கும்பல், செப்பு தகட்டில் பெயர்களை பொறித்து கொண்டு வந்து எலுமிச்சை பழம் மற்றும் தங்க நகைகள் இருந்த கலசத்தையும் வைத்து மாந்திரீக பூஜையில் இறங்கியது.

செபிலா மேரியை மட்டும் பூஜையில் அனுமதித்தனர். ஒரு கட்டத்தில் பூஜை முடிய போவதாகவும் எனவே வீட்டு சமயலறையில் இருந்து உப்பும் தண்ணீரும் எடுத்து வருமாறு செபிலா மேரியை அனுப்பி வைத்துள்ளனர்.

செபியா மேரியும் அவற்றை எடுத்து கொண்டு வந்து கொடுக்கவே, அவற்றை தெளித்து பூஜை முடிந்து விட்டதாகவும் தங்க நகைகள் இருந்த கலசத்தை வீட்டில் பாதுகாப்பாக பெட்டியில் பூட்டி வைக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர், வீட்டு பூஜையில் இருந்த செப்பு தகட்டினை மந்தரித்து, மாந்திரீக தகடு என கூறி வீட்டில் மாட்டியுள்ளனர்.

பின்னர், அவர்கள் சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு வந்த எண்ணையை கொடுத்து, இந்த எண்ணையை நாளை காலை (வெள்ளிக்கிழமை) தேய்த்து குளித்து விட்டு, பெட்டியில் இருக்கும் கலசத்தை திறந்து நகைகளை எடுத்து கொள்ளுங்கள் தோஷம் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளனர்.  பின்னர், அந்த குறி சொல்லும் கும்பல் இரவோடு இரவாக கொட்டகையை காலி செய்து மாயமானதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று அறைக்குள் சென்று பாதுகாப்பாக பெட்டிக்குள் நகைகளுடன் வைத்திருந்த கலசத்தை திறந்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

மஞ்சள் துணியில் பொதிந்து கலசத்தில் வைத்திருந்த தங்க நகைகளுக்கு பதில் கற்களே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த செபியா மேரி தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாந்திரீகம் என்ற பெயரில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச்சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர் 

படித்த பட்டதாரி பெண் ஒருவரே மூட நம்பிக்கையின் உச்சத்தால் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்டு நகைகளையும், பணத்தையும் இழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்