Published : 15,Nov 2019 11:42 AM
டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழப்பு - சேலத்தில் சோகம்

ஓமலூர் அருகே டெங்கு காய்ச்சலால் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள கோனேரிவளவு பகுதியில் வசிக்கும் தம்பதி காந்தி - லதா. கல்லுடைக்கும் வேலை செய்து வரும் இவர்களுக்கு அனுஸ்ரீ என்ற ஏழு வயது பெண் குழந்தை இருந்தார். இந்த குழந்தை அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் அனுஸ்ரீக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாரமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர், டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பதை அறிந்த மருத்துவர்கள் சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி, இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த குழந்தையின் பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வீட்டிற்கு கொண்டு வந்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
கடந்த ஒரு மாதமாகவே தாரமங்கலம் பகுதியில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.