Published : 28,May 2017 02:55 AM

புரமோஷன்களில் அதிருப்தி: விளம்பர அதிபர் கடத்தல்

Kannada-film-director-for-abducting-ad-agency-owner

படத்தின் விளம்பர வேலைகளில் திருப்தி ஏற்படாததால் விளம்பர நிறுவன அதிபரைக் கடத்திய கன்னட இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர்கள் நால்வரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னடத்தில் வெளியாகவுள்ள, எரடு கனசு (Eradu Kanasu) படத்தின் இயக்குனர் மதன். இந்த படத்துக்கான விளம்பர வேலைகளை பரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ரவி அக்‌ஷயா விளம்பர நிறுவனத்துக்கு மதன் தரப்பில் அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.16.3 லட்சம் பணமும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விளம்பர நிறுவனம் சார்பில் செய்யப்பட்ட புரமோஷன்களில் இயக்குனருக்கு அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் பரமேஷ்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரூ.8 லட்சத்தைத் திரும்பப் பெற்றதாகவும், மீதமுள்ள பணத்தை திரும்பத் தருமாறு அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பணம் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டதாகக் கூறி மதனின் கோரிக்கைகளை பரமேஷ்வர் நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து, பரமேஷ்வரின் அலுவலகத்துக்கு தனது உதவியாளர்கள் நால்வரை அனுப்பிய இயக்குனர் மதன், அவரைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. பரமேஷ்வரைக் கடத்திய மதன் தரப்பினர், அவரை பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் சிறை வைத்தனர். கிரிக்கெட் பேட் மற்றும் பெல்ட்டால் பரமேஷ்வரைத் தாக்கியதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தந்தை குருசிடாப்பா மற்றும் உறவினர் ஒருவருக்கு போனில் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசில் பரமேஷ்வரின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்த போலீசார், 4 மணி நேரத்தில் பரமேஷ்வரை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட மதன் மற்றும் அவரது உதவியாளர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்