Published : 28,May 2017 02:46 AM

கேரளா முழுவதும் மாட்டிறைச்சி விருந்துப் போராட்டங்கள்

Kerala-sees--beef-fests--in-protest-against-ban-on-sale-of-cattle-for-slaughter

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் ஆங்காங்கே மாட்டிறைச்சி சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டது.

கேரள முதல்வர் பினராய் விஜயன், மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளும் சிபிஎம், எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் இக்கட்சிகளின் இளைஞர் பிரிவுகள் இந்த உத்தரவுக்கு எதிராக பேரணி நடத்தியதோடு மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சி விருந்துப் போராட்டங்களை நடத்தியது.

மாநிலத் தலைநகரில் தலைமைச் செயலகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மாட்டிறைச்சி சமைத்து உண்டதோடு, விநியோகம் செய்தனர். இந்தப் போராட்டத்திற்குத் தலைமை வகித்த டி.ஒய்.எஃப்.ஐ. தேசியத் தலைவர் முகமது ரியாஸ் கூறும்போது, “மத்திய அரசுக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நாங்கள் மாட்டிறைச்சி உண்போம். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க விரும்புகிறோம்” என்றார்.

அதேபோல் கொல்லம் மாவட்டத்தில் டிசிசி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் தொண்டர்களும் மாட்டிறைச்சி சமைத்து உண்டனர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியபோது, “தலைமைத் தபால் அலுவலகம் மூலம் மோடிக்கும் மாட்டிறைச்சி அனுப்பப்படும்” என்றார். கொச்சியில் சுற்றுலாத்துறை மற்றும் தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மாட்டிறைச்சி விருந்தில் கலந்து கொண்டார். 

மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி கூறும்போது, “இந்த உத்தரவை கிழித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும். வரும் திங்களன்று தடையை எதிர்த்து கருப்பு நாள் அனுசரிக்கப்படும்” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்