Published : 28,May 2017 02:40 AM
ஸ்டோக்ஸ் சதம்: தொடரை வென்றது இங்கிலாந்து!

இங்கிலாந்து- தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 2 ரன்னில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதமடித்தார்.
இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. இந்த ஆண்டில் அந்த அணி 300 ரன்களை கடப்பது இது 7வது முறையாகும். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 79 பந்துகளில் 3 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 101 ரன் குவித்தார். இது இவருக்கு இரண்டாவது சதம். பட்லர் 65 ரன்னும் கேப்டன் மோர்கன் 45 ரன்னும் குவித்தனர்.
தென்னாப்பிரிக்க தரப்பில் ரபடா 2, பிரிடோரியஸ் 1, அறிமுக வீரர் மகாராஜ் 1, பெலுக்வாயா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 328 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகப்பட்சமாக, கியூ டி காக் 98 ரன்கள் எடுத்தார். மில்லர் 71 ரன்னும் கேப்டன் டிவில்லியர்ஸ் 52 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பிளங்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் அடங்கிய இத்தொடரை இங்கிலாந்து வென்றது.