
வைரஸ் காய்ச்சல் காரணமாக நியூசிலாந்து அணிக்கெதிராக இன்று நடக்கும் பயிற்சிப் போட்டியில் யுவராஜ் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு முன்பாக, பயிற்சிப் போட்டிகள் நடந்து வருகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் யுவராஜ் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்று பிசிசிஐயின் மருத்துவக் குழு அறிவித்துள்ளது.
வைரஸ் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் குணமடைந்து மற்ற போட்டிகளில் அவர் பங்கேற்பார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, குடும்பத்தில் நடந்த திருமணம் காரணமாக, ரோகித் சர்மா லேட்டாக, இன்றுதான் இந்திய அணியுடன் இணைகிறார். அதனால் இன்றைய போட்டியில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.