Published : 11,Nov 2019 01:42 AM
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

இந்திய தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என அழைக்கப்பட்ட, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
டி.என்.சேஷன் என அழைக்கப்படும் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லையில் பிறந்தார். 1955-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த டி.என்.சேஷன் தமிழகத்திலும், மத்திய அரசியலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு 10-வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற டி.என்.சேஷன், பல்வேறு அதிரடி முடிவுகளை நடைமுறைப்படுத்தினார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த டி.என்.சேஷன், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 9.45 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். சேஷனுக்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில், தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த அவர் படுக்கைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகவும், அவரது வளர்ப்பு மகள் ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளார். சேஷனின் உடல் இன்று பிற்பகலில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டி.என்.சேஷனின் மனைவி ஜெயலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. டி.என்.சேஷனின் மறைவை முதலில் உறுதிப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, சேஷன் மிகச்சிறந்த அறிவாளி என்றும் தனக்கு பின் வந்த ஆணையர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்தவர் என்றும் கூறியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்களால் ஜனநாயகம் வலுவடைந்ததாகவும், அனைவரும் பங்கேற்கும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சேஷனின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.