Published : 05,Nov 2019 02:52 AM
’இப்படி உடைச்சிட்டீங்களே?’ நடிகை சோனாக்ஷி புகார், இண்டிகோ வருத்தம்!

தனது சூட்கேஷை உடைத்துவிட்டதாக நடிகை சோனாக்ஷி சின்ஹா, இண்டிகோ விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளார்.
இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பிசியாக நடித்து வரும் இவர், தமிழில் ரஜினி ஜோடியாக ’லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவரது சூட்கேஷின் கைப்பிடிகள் மற்றும் வீல் ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன.
இதுபற்றியை வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த சோனாக்ஷி, ‘உடைக்க முடியாதை கூட உடைத்துவிட்டீர்களே?’ என்று கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில், ’இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தேன். நன்றாக இருந்த சூட்கேஷைதான் கொண்டு சென்றேன். ஆனால், இப்போது முதல் கைப்பிடி முழுவதுமாக உடைந்திருக்கிறது. பக்கவாட்டில் உள்ள இரண்டாவது கைப்பிடியும் உடைந்திருக்கிறது. சூட்கேஷூக்கு கீழே இருக்கும் சக்கரத்தை காணவில்லை. நன்றி இண்டிகோ ஊழியர்களே’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது. பலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் தங்களது லக்கேஜும் இப்படி உடைந்திருந்ததையும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர், ‘’லக்கேஜை எடுக்கும்போதே, புகார் செய்திருக்க வேண்டும். வெளியில் வந்தபின் சொன்னால், அவர்கள் கண்டுகொள்வதே இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சூட்கேஷ் உடைந்ததற்கு சோனாக்ஷியிடம் வருத்தத்தை தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், லக்கேஜை கையாளும் எங்கள் நிறுவன குழு இதுபற்றி விசாரிப்பார்கள் என்றும் விரைவில் தங்களை சந்திக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
Hi @IndiGo6E, Hulk is 6E, this was not so 6E. You broke the unbreakable.#Indigopic.twitter.com/8x4lVzBlqH
— Sonakshi Sinha (@sonakshisinha) November 3, 2019