
தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்தில் நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தாய்லாந்து சென்றார். தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிட்டார்.
வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார் மோடி. அத்துடன் பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் கூறினார். இந்த நிகழ்ச்சியில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றை மோடி வெளியிட்டார். மோடி பேசும் போது இந்தியர்கள் பலத்த கோஷம் எழுப்பினர்.
அப்போது பிரதமர் மோடி, ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற குறளைக் குறிப்பிட்டு பேசினார். அதைக் கேட்ட தமிழர்கள் உற்சாகம் அடைந்தனர். மோடி குறிப்பிட்ட குறளுக்கு, ‘தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்’ என்பதே பொருள். இதன் மூலம் ஈகை மனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.