Published : 01,Nov 2019 10:55 AM
இந்தியா- ஜெர்மனி இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா- ஜெர்மனி இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் டெல்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான உடன்பாடுகள் கையெழுத்தாகின.
அதன்பின் இரு நாட்டு தலைவர்களும் தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கல்வி, இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் இந்தியாவும், ஜெர்மனியும் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஏஞ்சலா மெர்கல், ஜெர்மனியில் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், தொழிற்பயிற்சிக்காக ஆசிரியர்களை பரிமாறிக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார்.