Published : 31,Oct 2019 06:11 AM
பாக். எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

பாகிஸ்தானில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில், கராச்சி - ராவல்பிண்டிக்கு இடையே தேஜ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வழக்கம் போல நேற்றும் கராச்சியில் இருந்து கிளம்பியது. பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள லியாகத்பூர் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, அடுத்தடுத்தப் பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப் பட்டது. இந்த விபத்தில் மூன்று பெட்டிகள் முற்றிலும் எரிந்தன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள், லியாகத்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பயணிகள் காலை உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்திய சிறியவகை கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.