
ஒப்பந்தத்தை மீறி, டெலிகாம் நிறுவனம் ஒன்றின் தூதரானதற்கு விளக்கம் கேட்டு, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர், ஷகிப் அல் ஹசன். சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி சில வீரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டை தவிர மற்றவை ஏற்கப்பட்டன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாளில், பிரபலமான டெலிகாம் நிறுவனமான கிராமின்போன் நிறுவனத் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஷகிப். பங்களாதேஷ் அணியில் ஆடும் கிரிக்கெட் வீரர்கள், டெலிகாம் நிறுவனங்களின் தூதராகக் கூடாது என்று ஒப்பந்தம் உள்ளது. அதை மீறி அவர் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசன் கூறும்போது, ‘கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி ஷகிப், டெலிகாம் நிறுவனத்தின் தூதராகி உள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப இருக்கிறோம். திருப்திகரமான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை என்றால், அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுப்போம்’ என்றார்.