Published : 24,Oct 2019 07:30 AM
‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை’ - ரயில்வே காவல்துறை அறிவிப்பு

அய்யப்ப பக்தர்கள் ரயில் நிலையங்களில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக ரயில்வே காவல்துறை இணைத்து பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. அப்போது ரயில்வே காவல்துறை டிஎஸ்பி முருகன் தலைமையில் பள்ளி மாணவ- மாணவிகள் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என்பதனை வழியுறுத்தி பதாகைகள் ஏந்திய படி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேரணியாக சென்றனர்.
மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து ரயில்வே போலீஸ் டிஎஸ்பி முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரயில்களில் பயணிகள் வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதனை மீறி கொண்டு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெடிபொருட்களை கொண்டு செல்வதை கண்டறிய கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
அய்யப்ப பக்தர்கள் ரயிலில் ஏறுவதற்கு முன்பு பக்தி ரீதியிலாக கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே காவல்துறை அறிவுறுத்தி உள்ளோம். பாதுகாப்பற்ற முறையில் நெருப்பு பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் என யாராக இருந்தாலும் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது. அதனை ரயில்வே காவல்துறை ஒரு போதும் அனுமதிக்காது" என்றார்.