Published : 23,Oct 2019 01:44 PM
2017-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களில் 98 விழுக்காட்டினர் அறிமுகமானவர்களாலேயே அந்தக் கொடுமைக்கு ஆளாகியுள்ளது குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
53 வழக்குகளில் குடும்ப உறுப்பினர்களே குற்றவாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாம் வாழும் புவியையும், நாட்டையும் தாயின் பெயரால் அழைத்து வந்தது தமிழ்ச் சமூகம். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, மகளாக, பேத்தியாக ஆணின் வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒரு வகையில் தொடர்கிறாள் பெண். அவளை உறவாக ஏன் உயிராகக் கூட மதிக்காமல் வெறும் உடலாய் மட்டுமே பார்க்கும் சில ஆண்களைப் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.
அதன்படி 2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 98.6 விழுக்காடு குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமானவர்கள்தான். அதிலும் 53 பேர் குடும்ப உறுப்பினர்கள்.
ஆணும் பெண்ணும் மனிதம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி விடுகிறார்கள். மற்றவரை பாதிக்காததே மனிதம். அப்படியாயின் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காதவரே மனிதர்.