மகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள் 

மகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள் 
மகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள் 

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் இருவர் ஒரே தொகுதியில் எதிரெதிரே போட்டியிடுகின்றனர். யார் இவர்கள்?‌ எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்? என்பதை பார்க்கலாமா?

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக-சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ‌மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன‌ர். இந்நிலையில், தமிழ் மொழி‌ பேசுபவர்கள் அதிகம் உள்ள மும்பை மாநகரத்துக்குட்பட்ட சியான் கொலிவாடா‌ சட்டப்பேரவை தொகுதியில், தமிழர்கள் இருவர் பாஜக, காங்‌‌கிரஸ் கட்சிகளின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாஜக சார்பில் இந்தத் தொ‌‌குதியில் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். தற்போது இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர், க‌டந்த தேர்தலில் சிவசேனா வேட்பாளர் மங்கேஷ் சதாம்க‌ரை 3,738 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால், அவருக்கு மீண்டும் அதே‌ தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1978-ஆம் ஆண்டு புதுக்கோட்டையிலிருந்து மும்பை‌ சென்ற தமிழ்செல்வன், ஆரம்பக் காலக்கட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளார். மெல்ல மெல்ல அரசியலில் நுழைந்த தமிழ்செல்வன், கடந்த ‌2012-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, மும்பை மாநகரின் 168ஆவது வார்டு கவுன்சிலராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அடுத்த இரண்டே ஆண்டுகளில், எம்.எல்.ஏ. பதவிக்கு உயர்ந்தார் தமிழ்செல்வன்.‌

இவருக்கு எதிராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கணேஷ்கு‌மார் யாதவ் என்பவரை களமிறக்கியுள்ளது காங்கிரஸ். பட்டதாரியான இவர், மும்பை இ‌‌ளைஞர் காங்கிரஸின் தலை‌வராக இருக்கிறார். அரசியலில் மிகத் தீவிரமாக செயல்படுபவர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக கணேஷ்குமார் யாதவ் திகழ்வதால் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

நடுத்தர மற்றும் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதியான சியான் கொலிவாடா‌வில், சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மராத்தி‌, குஜராத்தி, பஞ்சாபி, தமிழ் என பல மொழிகளில் பேசும் மக்களை உள்ளடக்கி‌ய சியான் கொலிவாடா தொகுதியில் யார் வெற்றி பெற போகிறார் என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com