
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்துகொண்டு ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக தலைவரின் பரப்புரைக்கு மக்கள் அளித்த அமோக ஆதரவை பார்க்கும்போது இந்தத் இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக, காங்கிரஸ் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளதாகவும் கனிமொழி கூறினார். அப்போது, நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, திமுக சட்டமன்ற உறுப்பினர் பணம் கொடுத்ததாக இருந்தால், அது குறித்து விசாரணை நடக்கட்டும். அதன் பின்னால் பார்க்கலாம் என்றார்.
மேலும் அவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறானது. அதுவும் பதவியில் இருந்து கொண்டு இதுபோன்று பேசியது மிகவும் தவறு என்றார்.
முன்னதாக நாங்குநேரியில் பரப்புரை மேற்கொண்டிருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், மனு அளிக்கச் சென்ற இஸ்லாமிய மக்களை அவர் அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.