
கடந்த 7 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டமும், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டமும் எந்தெந்த ஆண்டு முதல் மாற்றப்படும் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
2018-19 கல்வியாண்டு முதல் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. 2019-20ஆம் கல்வியாண்டு முதல் 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படும். 2020-21ஆம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும்.
பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ உள்ளிட்ட இதர கல்வி வாரிய பாடத்திட்டங்களுக்கு மேலானதாக உருவாக்கப்படும். பாடத்திட்ட மாற்றம் அண்ணா பல்கலைக்கழக, வேளாண் பல்கலைக்கழக, தொழில்சார் பல்கலைக்கழகங்களோடு இணைந்து மேற்கொள்ளப்படும்.
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடத்தோடு தகவல் தொழில்நுட்பவியலும், கணினிப் பாடமும் சேர்க்கப்படும். தொழிற்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டமும் 2020-21ஆம் கல்வியாண்டிற்குள் படிப்படையாக மாற்றப்படும்.
மனன முறையை தவிர்க்கும் விதமாகவும், மன அழுத்ததை ஏற்படுத்தாத வகையிலும், தமிழக தொன்மை, வரலாறு சார்ந்த அறிவோடு நவீனங்களை கையாளும் வகையிலும், ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாத வகையிலும் புதிய பாடத்திட்டம் இருக்கும். புதிய கற்றல், கற்பித்தல் முறைகளுக்கான கையேடு வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.