Published : 15,Oct 2019 06:30 AM
“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..!

ஜெயலலிதா இருக்கும்வரை அவர் மத்திய அரசுக்கு அடிபணிந்து போனதில்லை... ஆனால் இன்று சமஸ்கிருதம் பேச வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது என ஸ்டாலின் தெரிவித்தார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்குநேரியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவளைக்காரன் குளம் பகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை, ஆனால் இன்று ஹிந்தி திணிப்பு, சமஸ்கிருதம் பேச வேண்டும் என்பதெல்லாம் கூறப்படுகிறது. சொத்தில் பெண்ணுக்கு சமஉரிமை, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை, விதவை பெண்களுக்கு உதவித்தொகை இவையெல்லாம் மகளிர் நலன்கருதி கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள்” எனத் தெரிவித்தார்.