[X] Close

 “ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..?” -  மக்களே உஷார்..!

Fraud-gangs-roaming-all-over-Tamil-Nadu

தமிழகம் முழுவதும் ஆசைவார்த்தைகள் கூறி மோசடி செய்து வந்த 2 பேரை அறந்தாங்கி தனிப்படை போலீசார் கைது
செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ராஜலட்சுமி.  
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 2 சோப்பு 15 ரூபாய் என்றும்
சோப்பின் உள்ளேயே பரிசு கூப்பன் இருக்கிறது என்றும் சொல்லி விற்பனை செய்துள்ளனர். தங்கராசு மனைவி காசு கொடுத்து
சோப்புகளை வாங்கியுள்ளார். 


Advertisement

அதில் ஒரு சோப்பில் பரிசு கூப்பன் இருந்திருக்கிறது. உடனடியாக பொருட்களை விற்க வந்த இருவரும் ‘நீங்கள்
அதிர்ஷ்டசாலிகள். காலையிலிருந்து யாருக்கும் பரிசு விழவில்லை. உங்களுக்கு மட்டுமே விழுந்திருக்கிறது’ என்று அவர்கள்
தெரிவித்தவுடன் தங்கராசு தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூலிங்
ஃபேன், இன்டக்க்ஷன் ஸ்டவ் இரண்டும் 4,500 ரூபாய் மட்டுமே என்று சொல்லி இருக்கிறார்கள். சிறிது நேரம் அதனை வாங்க
மறுத்த தங்கராஜ் தம்பதி அவர்களின் வற்புறுத்தலை தொடர்ந்து 4,500 ரூபாய் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கி
இருக்கின்றனர். மேலும், ஒரு சில நாட்களில் புதுக்கோட்டையில் கம்பெனி ஆரம்பிக்க இருப்பதாகவும் அப்போது தங்களது
வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசு வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், மூன்று நாட்கள் கழித்து தங்கராசுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் நீங்கள்
வாங்கிய சோப்பு மற்றும் பொருட்களுக்காக குலுக்கல் முறையில் இரண்டாவது பரிசாக ஒரு ஸ்கூட்டியை பெற்றிருக்கிறீர்கள்
என தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த சந்தோஷமடைந்த தங்கராசு தம்பதியினர், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று
கேட்டிருக்கிறார்கள். அதற்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே ஜிஎஸ்டி வரி.. கட்டிவிட்டு பைக்கை எடுத்துச் செல்லுங்கள்
என்றும் அதற்காக பேங்க் அக்கவுண்ட்டையும்  வழங்கியிருக்கிறார்கள். இதனையடுத்து தங்கராசு, தனியார் வங்கி மூலமாக 13
ஆயிரத்து 500 ரூபாயை அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். 

அதன் பிறகு மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள்  தங்கராசு உங்களுக்கு மீண்டும் அதிர்ஷ்டம்
காத்திருக்கிறது. அதாவது முதல் பரிசான காரை, பரிசு விழுந்தவர்கள் வாங்க முன்வரவில்லை என்றும் அதை நீங்களே
எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 

கார் கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்த தங்கராசு மீண்டும் பலரிடமும் கடனைப் பெற்று ஆன்லைன் மூலமாக
35000 ரூபாய் பணத்தை அவர்களுக்கு அனுப்பி இருக்கிறார். அதன்பிறகு சில மணி நேரங்களில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த
மோசடி கும்பல் காரை கொண்டு வந்துகொண்டிருந்தபோது செக்போஸ்டில் கார் பிடிபட்டு விட்டது என்றும் ஏற்கெனவே
அனுப்பியிருந்த பணம் இரண்டு தவணையாக வந்திருப்பதால் ஒரே தவணையாக ஐம்பதனாயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே
காரை அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்ததாகவும் தங்கராசிடம் தெரிவித்திருக்கின்றனர். 

இதனை நம்பாத தங்கராசு காவல்துறை அதிகாரியிடம் தொலைபேசியை கொடுக்க சொல்லி இருக்கிறார். அப்போது அவர்கள்
யூடியூப் வழியாக வாக்கிடாக்கி  சப்தத்தை வைத்துவிட்டு இன்ஸ்பெக்டர் போல் ஒருவர் பேசி உள்ளார். இதனை உண்மை என்று
நம்பிய தங்கராசு மீண்டும் ஐம்பதாயிரத்தை கட்டுவதற்கான முயற்சியில் பைனான்சியர் ஒருவரை நாடியிருக்கிறார்.

அவரிடம் நடந்ததை கூறும்போது இது முற்றிலும் மோசடி என்று நினைத்த பைனான்சியர் தங்கராசுவை அழைத்துக் கொண்டு
காவல் நிலையம் சென்றார். அங்கு துணை கண்காணிப்பாளர் கோகிலா மற்றும் உதவி ஆய்வாளர் ராமன் ஆகியோரிடம் புகார்
அளித்ததையடுத்து மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் காந்திஸ்வரன்,
இசக்கிமுத்து என்பவர் மகன் பேச்சிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்
அவர்கள் ஒரு கும்பலாக தமிழகம் முழுவதும் இது போன்ற பல்வேறு மோசடிகளை செய்து பல லட்ச ரூபாய் கையாடல்
செய்திருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள இந்த கும்பலைச் சேர்ந்த பலரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close