[X] Close

“பகைய வளர்க்க நெனைக்காத, கடக்க பழக்கிக்க..” - தூங்கவிடாத அசுரன் வசனங்கள்

Vetri-Maaran-and-Dhanush-gift---asuran-dialogue-will-be-taken-the-film-long-time

ஒரு படத்தின் கதாப்பாத்திரங்கள் படம் பார்த்த ஒரிரு நாட்களுக்கு பிறகு நம்முடனே பயணிக்கிறது என்றால் நிச்சயம் அந்தப் படம் காலத்திற்கும் நிற்கும். அப்படியான ஒரு படமாக அசுரன் உருவாகி இருக்கிறது என்றே சொல்லலாம். படத்தில் வரும் தந்தையும் மகனுமான சிவசாமியும்(தனுஷ்), சிதம்பரமும்(கென் கருணாஸ்) நீண்ட நாட்களுக்கு மக்கள் மனதில் இருந்து மறையமாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள அழுத்தமான வசனங்களும் காட்சிகளும் தான். ஏனென்றால் அந்த வசனங்கள் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருப்பதுதான்.

                             

வன்முறை என்பது இன்றளவும் பல இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பல நேரங்களில் வன்முறைக்கான காரணங்கள் மிகவும் அற்பமானதாகக் கூட இருக்கும். கொஞ்சம் பொறுமையுடன் சில விஷயங்களை கடந்து சென்றுவிட்டால் பல இழப்புகளை தவிர்த்து விடலாம். பல நேரங்களில் இழப்புக்கு பிறகே வன்முறையை தவிர்த்திருக்கலாமே என்று யோசித்து வருத்தப்படுவார்கள். இதனைத்தான் படத்தில் இறுதியில், “பகைய வளர்க்க நெனைக்காத, கடக்க பழக்கிக்க..”  என மகன் சிதம்பரத்திற்கு அப்பா சிவசாமி அறிவுரை சொல்வதுபோல் சொல்லப்பட்டிருக்கும். 


Advertisement

                                            

அதேபோல், “நம்ம கிட்ட காசிருந்த புடுங்கிக்குவானுவ, நிலமிருந்தா எடுத்துக்குவானுவ, படிப்ப மட்டும் ஒன்னும் செய்ய முடியாது”, “ஒரே மண்ணுல பொறக்குறோம் ஒரே மொழி பேசுதோம் இது போதாதா நாம சேர்ந்து வாழறத்துக்கு!”, “படிச்சு அதிகாரத்துக்கு வா, அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க” என்று நீளும் அந்த அறிவுரை வசனங்கள் அவ்வளவு முக்கியமானவை. வன்முறையை வன்முறையால் மட்டுமே எதிர்கொள்ள கூடாது, அதற்கு வேறு வழி உண்டு என்று சொல்லித்தான் சிவசாமி தன் மகனுக்கு இந்த அறிவுரைகளை சொல்லுவார். இந்த வசனங்களை சுட்டிக்காட்டிதான் அரசு படத்தை நெல்லை மாநகர காவல் ஆணையர் பாராட்டி இருந்தார். 

                                         


Advertisement

“அவனுக்கு நாய் போச்சுனு கஷ்டமாயிருக்கு. ஆனா எனக்கு நாயோட போச்சேனு ஆறுதலாயிருக்கு”, என அனுபவபூர்வமாக பொறுமையாக பேசும் இடத்திலும், “போட்டோ புடிச்சா ஆயுசு குறைஞ்சிடும்னு, ஒரு போட்டோ கூட எடுக்காம, இப்போ அவன் நினைப்பா ஒரு போட்டோ கூட இல்லையே” னு கதறி அழும் காட்சியிலும் தனுஷின் வசனங்கள் அப்படியிருக்கின்றது.

பிளாஷ் பேக் காட்சியில், அம்மு அபிராமி கதாபாத்திரம் பேசும் இரண்டு வசனங்கள் நம்மை ஆத்திரப்படவும் அழவும் வைத்துவிடுகின்றது. “என்ன அடிக்குறதுல அவங்களுக்கு என்ன பெருமை மாமா”, “அவன் என்ன செருப்ப தலையில வச்சி நடக்கசொல்லி அடிச்சதுகூட வலிக்கல.. ஆனா அதை இந்த ஊர்ல எல்லாரும் வேடிக்கை மட்டுமே பாத்துட்ருந்ததுதான் தாங்க முடில” என நம்மையும் சேர்த்து கலங்க வைத்துவிடுகிறார் அம்மு அபிராமி.  

                              

அதேபோல், படத்தில் எதிர்பாராமல் எல்லோரையும் வியக்க வைத்தது “எள்ளு வயல் பூக்கலையே..” பாடல்தான். ஏனெனில் படத்திற்கு முன்பு அந்த பாடல் வரிகள் வெளியாகவில்லை. தற்போது அந்த பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த பாடலில், “கொல்லயில வாழஎல.. கொட்டடியில் கோழிகுஞ்சு அத்தனையும் உன் பேர சொல்லுதய்யா..” என மகனை இழந்த தாயின் ஓலமாக யுக பாரதியின் வரிகள் ஒலிக்கின்றது. இந்த வசனங்களும், பாடல் வரிகளுமே அசுரனை காலத்திற்கும் தாங்கிப் பிடிக்கும். 

 


Advertisement

Advertisement
[X] Close