[X] Close

“அரசு வழக்கறிஞரே இப்படி செய்யலாமா?” - பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் குமுறல்

Marry-him-or-take-money---TN-govt-lawyer-accused-of-threatening-child-sexual-abuse-victims

திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. வழக்கறிஞர் தனலட்சுமி மீது இரண்டு குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் மனுக்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. அதாவது தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய வழக்கறிஞரே எதிராகவும் தங்களை மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்த குடும்பத்தினர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் பேட்டி எடுத்து நியூஸ் மினிட் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.


Advertisement

      

முதல் புகார்:


Advertisement

மாதவரத்தைச் சேர்ந்த மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கடந்த 2015ம் ஆண்டு தன்னுடைய பக்கத்துவீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் வெளிப்படையாக தெரிவித்தார். இவரது வழக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞரான தனலட்சுமி வசம் வந்தது. தற்போது, வழக்கறிஞர் தனலட்சுமி தனக்கு எதிராக செயல்படுவதாக மேரி புகார் அளித்துள்ளார். 

தனக்கு நேர்ந்த விஷயங்கள் குறித்து மேரி கூறிய போது, “எனக்கு அப்போது 17 வயதுதான் ஆனது. வழக்கறிஞருடன் பேசும் போது யாரேனும் என்னுடன் துணைக்கு இருந்தால் சரியாக இருக்கும் என விரும்பினேன். ஆனால், அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. நான் வழக்கறிஞரின் அறைக்குள் நுழைந்த போது, குற்றம்சாட்டப்பட்ட கோபிநாத் அங்கு இருந்தார். என்னைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் உடன் கட்டாயத்தின் பேரில் உட்கார வைக்கப்பட்டேன். 

பின்னர், அந்த நபரை பார்க்கும் போது எனக்கு பேச்சே வரவில்லை. நான் அழ ஆரம்பித்தேன். பயத்தில் எனக்கு நடுக்கமே வந்துவிட்டது. நான் கோபிநாத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற வேண்டுமென தனலட்சுமி கூறினார். இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால், வழக்கில் வெற்றி பெற வைக்க மாட்டேன், மற்ற வழக்கறிஞரை வாதாடவும் விட மாட்டேன் என தனலட்சுமி மிரட்டினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் நான் காதல் வசப்பட்டு இருந்தது போன்ற தோற்றத்தை விசாரணையின் போது வழக்கறிஞர் உருவாக்கினார். ஒருகட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டார் என்ற சந்தேகம் வந்தது” என்று கூறினார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.


Advertisement

         

இரண்டாவது புகார்:

அதேபோல், வாய் பேச முடியாத, மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கடந்த 2015ம் ஆண்டு அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்த வழக்கும் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் தனலட்சுமி வாதாடும் நிலை வந்தது. ஆனால், வழக்கறிஞர் தனலட்சுமி சரியாக வாதாடவில்லை என அவருக்கு எதிராகவே புகார் அளிக்கும் நிலைக்கு சிறுமியின் பெற்றோர் தள்ளப்பட்டனர். 

தங்கள் மகளுக்கு நடந்த கொடூரம் குறித்தும், வழக்கை எதிர்கொண்ட விதம் குறித்து சிறுமியின் தந்தை கூறிய போது, “எனது மகள் கற்றல் குறைபாடு மற்றும் பேச்சு குறைபாடு உடையவர். நடப்பதற்கு இயலாது. ஒரு கை செயல்பாடு இல்லாமல் உள்ளது. ஒருநாள் மிகவும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார். எப்படியோ தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு என்னுடைய மனைவியிடம் நடந்ததை கூறினார். மகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், அவளை லேப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தலை ஒரு மாற்றுத்திறனாளி சிறுமியால் எப்படி எதிர்கொள்ள முடியும்?.

      

இந்த விஷயத்தை வெளியே எடுத்துச் செல்ல உறவினர்களோ, அக்கம் பக்கத்து வீட்டினரோ யாரும் உதவ முன் வரவில்லை. இருப்பினும், தலைமை ஆசிரியருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். நீதிமன்றத்திற்கு அவரை வரவைத்தோம். நீதி கிடைக்க போராட வேண்டிய எங்களை வழக்கறிஞருக்கு எதிராக போராட வைத்துவிட்டார்கள். 

வழக்கறிஞர் தனலட்சுமி எங்களை பிச்சைக்காரர்களை போல் நடத்தினார். எப்பொழுதெல்லாம் அவரை பார்க்க செல்கிறோமோ, அப்போதெல்லாம் உள்ளே விடாமல் வெளியே அனுப்பினார். ஒருமுறை மற்ற சாட்சிகளிடம் அவர் பேசிக் கொண்டிருந்த போது நாங்கள் உள்ளே நுழைந்தோம். ஆனால் அவர் அனுமதிக்கவில்லை. அவர் பேசிய சாட்சிகள் நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்” என கூறினார்.

அவர் வழக்கு நடத்துவது சரியில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற அவர்கள் முயற்சித்தனர். ஆனால், அது முடியவில்லை. அவர்கள் பயந்ததுபோல் வழக்கில் இருந்து தலைமையாசிரியர் ஸ்ரீனிவாசன் விடுதலை செய்யப்பட்டார். குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

       

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருந்ததாக திருவள்ளூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரே கூறினார். பெற்றோரும், அந்தச் சிறுமியும் சரியான முறையில் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கு வெற்றிபெற்றிருக்க வேண்டும் என அந்த அதிகாரி கூறினார். இரண்டு குடும்பத்தினரிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டதாகவும், அதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு வழக்கறிஞர் இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன், அரசியல் பின்புலம் இருப்பதால் அந்த வழக்கறிஞருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார். 

இந்த விவகாரம் குறித்து, திருவள்ளூரைச் சேர்ந்த கிரிமினல் வழக்கறிஞர் ஜான்பால் கூறிய போது, “இந்த வருடம் ஜூன் மாதம் வழக்கறிஞர் தனலட்சுமி போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ரூ 2000 கேட்டுள்ளார். இதனையடுத்து, திருவள்ளூர் பார் அசோஷியேசனைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பினோம். அதில், வழக்கறிஞர் தனலட்சுமி பாதிக்கப்பட்டவர்களையும், குற்றம்சாட்டப்பட்டவர்களை மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தோம். இருதரப்பினரிடமும் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார் என குற்றம்சாட்டியிருந்தோம். ஆனால், யாரிடம் இருந்தும் பதில் வரவில்லை. பின்னர், வழக்கறிஞர்கள் ஒன்று கூடி மகிளா நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்தினோம். ஆனால், அரசியல் பின்புலத்தால் நடவடிக்கை எதுவும் இல்லாமல் தப்பினார்” என்றார். 

           

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அரசுத் தரப்பு வழக்கறிஞரான தனலட்சுமி முற்றிலும் மறுத்துள்ளார். இதில் தன்னார்வலர்களின் தலையீடு இருப்பதாகவும் அவர் கூறுகின்றார். 

courtesy - the news minute


Advertisement

Advertisement
[X] Close