[X] Close

ரஜினி அரசியல்... புயலா? புஸ்வாணமா?

rajini-s-politics---storm--Pusvanam-

தமிழகத்தில் தற்போது ரஜினியை மையம் கொண்டுள்ளது அரசியல் மேகம். அவ்வப்போது இப்படி மையம் கொள்வதும் பின்னர் சந்தடி இல்லாமல் அந்த மேகம் காற்றில் கரைவதும் வழக்கம். இந்த முறை அது இடியுடன் கூடிய மழையைப் பொழியும் என்று கூறப்படுகிறது. 


Advertisement

ஒருபுறம் ஆதரவு, மறுபுறம் எதிர்ப்பு என சூழப்பட்டுள்ள ரஜினி அரசியல் புயலாகுமா? இல்லை வழக்கம்போல புஸ்வாணமாகிப் போகுமா? என்பதை அரசியல் மைய ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கணித்துக் கொண்டே இருக்கிறார்கள்... அரசியலுக்கு இதோ வருகிறார்... அதோ வருகிறார்… என்ற கதகதப்பிலேயே ரசிகர்களை வைத்திருந்து கால் நூற்றாண்டை கபளிகரம் செய்து விட்டார் ரஜினி. 

ரசிகர்கள் உடன் அண்மையில் நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் பேசிய பேச்சுகள், அவர் அரசியலுக்கு வருவதற்கான தூவானம் என்றே பலராலும் கட்டியம் கூறப்படுகிறது. ’நான் மதிக்கும் கலைஞரும், ஜெயலலிதாவும் அரசியலில் இருக்கும் வரை அரசியலுக்கு வரப்போவதில்லை’ என தன் நெருங்கிய நண்பர்களிடம் அவ்வப்போது ரஜினி மனம் விட்டுப்பேசியதாகத் தகவல்களும் உண்டு. ஆனால், அவர்கள் இருவரும் அரசியலில் இல்லாத நிலையில் அந்த வெற்றிடத்தை தமக்கானதாக்கும் முதல்படிதான், ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய அரசியல் கருத்துக்கள் என்கிறது அவரை நன்கு அறிந்த வட்டாராம். 


Advertisement

ரஜினியின் மனதை நன்கு அறிந்தவரும் அவரது நெருங்கிய நண்பருமான ராஜ்பகதூர், ’தமிழக மக்களுக்கு ரஜினி ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். விரைவில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்’ என உறுதிபடக்கூறுகிறார். ஆனாலும், ரஜினி மனதை யாராலும் அறிய முடியாது. தான் முன்வைத்த கருத்துக்களில் இருந்து அவர் பின் வாங்கிய சம்பவங்கள் பல உண்டு. ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்கிற வாதங்கள் வலுத்து வரும் நிலையில், அவர் தனிக்கட்சி தொடங்குவார்? இல்லை பாரதிய ஜனதா கட்சியில் இணைவார்? என்கிற பட்டிமன்றமும் பட்டிதொட்டியெங்கும் நடைபெற்று வருகிறது. '

பாரதிய ஜனதாவில் சேர ரஜினிக்கு கதவு திறந்தே இருக்கிறது என அக்கட்சியின் அமித்ஷா வலிய வந்து அழைப்பு விடுத்து இருக்கிறார். ஆனாலும், அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்பது பத்திரிகையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ரஜினிகாந்துக்கு அனைத்துக் கட்சிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்கிறார்கள் அவர்கள். பாஜகவில் சேர்ந்தால் அவர் தற்போது தனக்கிருக்கும் செல்வாக்கையும் இழந்து விடுவோம் என்று அவர் கருதுகிறார். அதனால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று கூறுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

தனிக்கட்சியோ, பாஜகவில் இணைவதோ… எப்படி ஆனாலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. ’நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியாது. எம்ஜிஆரை தவிர்த்து தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் நன்கு அறிந்தவர்’ என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்வதையெல்லாம் ஒரு பொருட்டாக ரஜினி எடுத்துக்கொள்ள மாட்டார். எதிர்ப்பு இருந்தால்தான் வளர முடியும் என்று கூறியுள்ள ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வந்தே தீருவார் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள். அவர் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பது சிறு சிறு அமைப்புகள் மட்டுமே. அவருக்கு எழுந்து வரும் ஆதரவையும் ரஜினி உணராதவரல்ல’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 


Advertisement

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டும்தான். மதப் பற்று கொண்டவர் என்பதால் அவர் பாஜகவில் இணைவார் எனக் கூறப்படுகிறது. அப்படி அவர் இணைந்தால், திராவிடத்தில் திளைத்த தமிழக மக்கள் ரஜினியை ஆதரிப்பார்களா? ஏற்கெனவே மதச்சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாஜகவை வெறுக்கும் சிறுபான்மையினர், பிரபலம் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினியை ஆதரிப்பார்களா? பல்வேறு கட்சிகளில் இருக்கும் அவரது ரசிகர்கள் பாஜகவில் இணைவதை விரும்புவார்களா? சந்தேகம்தான்... 

அடுத்த வாய்ப்பு தனிக்கட்சி..! இயக்குநர்கள் கூறுவதைக் கேட்டு மட்டுமே நடித்து ஏதோ வந்தோம். பஞ்ச் டயலாக் பேசினோம். கைதட்டலைப் பெற்றோம் அவ்வப்போது இயமலைக்கு சென்றோம் என்று மட்டும் முடிவதல்ல அரசியல். தனிக்கட்சி தொடங்கினால் மாவட்டச் செயலாளர்கள், வட்டம், ஒன்றியம் என அத்தனை பேரையும் தேர்வு செய்து நியமித்து, அவர்களைக் கண்காணித்து நிர்வகித்து...இத்தனையும் தாண்டி கட்சியின் தொண்டர்களை கட்டுப்பாடாக நிர்வகித்து, மக்கள் மத்தியில் தற்போது இருக்கும் வெறும் சினிமா பிரபலத்தை அரசியல் தலைவர் என்ற செல்வாக்காக படி உயர்த்தி... எத்தனையோ வேலைகள் இருக்கின்றன... அத்தனையும் செய்து விடுவாரா ரஜினி? 

வா தலைவா வா என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்த அவரது ரசிகர்களுக்கு இப்போது தலை முடி எல்லாம் நரைத்து விட்டது. ஆனாலும் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அத்தனையும் செய்து விடுவார் ரஜினி என்று...!


Advertisement

Advertisement
[X] Close