Published : 30,Sep 2019 01:59 AM
தமிழகத்தில் நாளை முதல் கனமழை

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கேவும் இன்று லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தின் ஒருசில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பலத்தமழை பெய்தது. குமரி மாவட்டம் குழித்துறை, புதுக்கடை, தக்கலை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் புதுக்கோட்டை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.