[X] Close

40 வருடங்களுக்குப் பிறகு தாயை தேடி தமிழகத்தில் அலையும் தத்துப் பிள்ளை..!

Adopted-son-searching-his-Biological-parents

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு டென்மார்க் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட டேவிட் சாந்தகுமார் என்பவர் ‌தற்போது தனது பெற்றோரை தமிழகத்தில் தேடி வருகிறார்.


Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியர். வறுமை காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்த இவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு, தங்களின் மகனைத் தத்துக் கொடுத்து விடுகிறார்கள். சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டார்.


Advertisement

தற்போது 41 வயதாகும் இவர், டென்மார்க்கிலிருந்து அவரின் உண்மையான பெற்றோரைத் தேடித் தமிழகம் வந்துள்ளார். “டென்மார்க்கில் வளர்ந்தாலும், எனது நிறத்திலும் உருவத்திலும் வேறுபாடு இருந்தது. எனது வளர்ப்புப் பெற்றோர் என்னை மிக நல்ல முறையில், தத்து எடுத்த உண்மையைச் சொல்லியே வளர்த்தார்கள். தற்போது படிப்பை முடித்து, டென்மார்க்கில் உள்ள பங்குச்சந்தை நிறுவனத்தில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். இடையிடையே என் அம்மா மற்றும் குடும்பத்தாரை பார்க்க ஆசையாக இருந்தது.

எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். பிள்ளைகள் வளர வளர, எனக்கு என் தாயின் ஏக்கம் அதிகமானது. அதையடுத்து எனது விருப்பத்தை, வளர்ப்புப் பெற்றோரிடம் கூறி, அவர்களின் சம்மதத்தின்பேரில் கடந்த 2013-ல் சென்னை வந்து உண்மையான பெற்றோர்களைத் தேடி அலைந்தேன். ஒரு மாதகாலம் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. விரக்தியுடன் திரும்பிச் சென்றுவிட்டேன்.


Advertisement

2017-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து டென்மார்க் நாட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அருண் டோஹ்லி என்பவரை சந்தித்தேன். அவர் புனேவில் குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறினார். அவரிடம் எனது விவகாரத்தைக்கூறி, அம்மாவை பார்க்கவும், கண்டுபிடித்துத் தரவும் கோரிக்கை வைத்தேன். அதனடிப்படையில் அருண் மற்றும் அவரது வழக்கறிஞர் அஞ்சலி பவார் ஆகியோர், தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக, என்னை சிறு வயதில் தத்துக் கொடுக்க உதவிய சென்னை பாதிரியார் ஜார்ஜ் என்பவரின் உறவினர்கள் மூலமாக 40 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட என் அம்மா மற்றும் குடும்பத்தினர் புகைப்படமும் எனது பிறப்புச் சான்றிதழும் கிடைத்தன. மேலும் ஓர் அதிர்ச்சியாக என் அண்ணனும் தத்துக் கொடுக்கப்பட்ட விவரமும் அப்போதுதான் தெரியவந்தது.

எனது இயற்பெயர் டேவிட் சாந்தகுமார் என்பதும், என் அண்ணன் பெயர் மார்டீன் என்கிற டேனியல்ராஜன் என்பதையும் தெரிந்து கொண்ட நான் அதன்பிறகு டென்மார்க் திரும்பி என் அண்ணனைத் தேடி அலைந்தேன். ஆனால், அவர் வேறு பகுதியில் உள்ள தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் டென்மார்க்கில்தான் இருக்கிறார் என்பதால் எப்படியேனும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு முன் என் அம்மாவைச் சந்திக்க வேண்டும். 

சென்னையில் தேடியபோது, ஒருவழியாக என் பெற்றோரின் பூர்வீகம் தஞ்சாவூர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்களைத் தேடி டென்மார்க்கில் இருந்து செப்டம்பர் 24-ம் தேதி தமிழகம் வந்தேன். எதுவுமே இல்லாமல், டென்மார்க்கில் இருந்து வந்த என்னிடம் இப்போது நிறைய புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதைவைத்து சொல்கிறேன். இம்முறை நிச்சயம் அம்மாவைப் பார்த்து விடுவேன்!

எனது உடல்நிலையில் மாற்றம் இருந்தாலும்கூட, என் முகத்தைப் பார்த்ததும் என் பெற்றோர் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. என் தாயின் புகைப்படங்கள் உள்ளதால், நானும் என் அம்மாவை சுலபமாக அடையாளம் காண முடியும்.” என தெரிவித்துள்ளார்.

தற்போது அம்மாப்பேட்டை ஊராட்சி அலுவலர்கள் உதவியுடன் வாழ்ந்த வீட்டை கண்டுபிடித்த டேவிட் சாந்தகுமார் அதிலிருந்து தான் வாழ்ந்த வீட்டின் ஒரு கல்லை எடுத்துக் கொண்டு தன் பெற்றோரை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம் என்ற நினைப்பில் தொடர்ந்து தேடி வருகிறார். விரைவில் அவரது பெற்றோர் கிடைக்க வேண்டும் என்பதே அந்த ஊராட்சி மக்களின் எண்ணமாக உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close