“ஊருக்கே திருமூர்த்திதான் செல்லப்பிள்ளை” - திறமைக்கு மரியாதை தந்த மதன் பேட்டி 

“ஊருக்கே திருமூர்த்திதான் செல்லப்பிள்ளை” - திறமைக்கு மரியாதை தந்த மதன் பேட்டி 
“ஊருக்கே திருமூர்த்திதான் செல்லப்பிள்ளை” - திறமைக்கு மரியாதை தந்த மதன் பேட்டி 

நேற்று முதல் சமூக வலைத்தளங்கள் திருமூர்த்தியின் குரலால் நிரம்பி வழிகின்றன. கண் பார்வையற்ற திருமூர்த்தியின் குரலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் பாடிய ‘கண்ணான கண்ணே’ பாடல் இசையமைப்பாளர் இமான் வரை சென்றுள்ளது. இதனைக் கண்ட இமான், அவருடைய விவரங்கள் கிடைக்குமா எனக் கோரிக்கை விடுத்தார். 

அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி. விரைவில் அவரைப் பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் பாடகர் சித் ஸ்ரீராமும் திருமூர்த்தி குரல்வளத்தை பாராட்டியுள்ளார். 

இந்நிலையில் திருமூர்த்தியின் பாடலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த மதன் என்பவர் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒரே இரவில் திருமூர்த்தியின் புகழ் உலகத்துக்கு தெரியவந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதற்காக சமூக வலைத்தள நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் திருமூர்த்தியின் பாடல் வீடியோ குறித்து பேசிய மதன், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டி கிராமம் தான் எங்கள் ஊர். திருமூர்த்திக்கு பிறவி முதலே பார்வை இல்லை. குடும்பச்சூழல் காரணமாக அவன் பள்ளிக்கும் போகவில்லை. தற்போது அவனுக்கு 17 வயதாகிறது. அவனுக்கு ஊரில் உள்ள இளைஞர்கள் தான் முழு ஆதரவு. ஊருக்கே அவன் செல்லப்பிள்ளை போலத்தான். எல்லார் வீட்டிலும் சாப்பிடுவான். எல்லோருடனும் பழகுவான். அவனுடைய பொழுதுபோக்கே பாடல் பாடுவதுதான். குடம் போன்ற பொருட்களை வைத்து இசையமைத்துக்கொண்டே பாடுவான். அவனைப் பாடச்சொல்லி ஊர் இளைஞர்கள் எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்போம். பாடல் பாடுவது மட்டுமின்றி திருமூர்த்தி மிமிக்ரியும் நல்லா செய்வான்.

அப்படித்தான் ஒருநாள் அம்மா பாடல் ஒன்றை பாடினான். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. உடனடியாக விஸ்வாசம் படத்தின் கண்ணான பாடலை பாடக்கோரி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன். நான் ஒரு அஜித் ரசிகர். அந்தப்பாடலும் அஜித் திரைப்பட பாடல் என்பதால் பல அஜித் ரசிகர்களின் குரூப்களில் வேகமாக பரவியது.

மதன்

ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கினர். அவர்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. அது இசையமைப்பாளர் இமான் வரை சென்றது. சில மணி நேரங்களில் தொடர்புகொண்ட இமான், திருமூர்த்திக்கு வாய்ப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார். கண் பார்வை இல்லாமல் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த திருமூர்த்தியின் வாழ்க்கையில் வெளிச்சம் பரவ தொடங்கி இருக்கிறது. திருமூர்த்தியின் வளர்ச்சிக்கு நானும் உதவி உள்ளேன் என்பது நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்காக சமூக வலைத்தளத்துக்கும், அஜித் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com