தமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்? |

தமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்? |
தமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்? |

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? என்பது திமுக ஒரு காலத்தில் முன்வைத்த லட்சிய முழக்கம். அதற்கேற்ப தமிழக ஆளுநருடன் திமுக கொண்டிருந்த மோதல் போக்கு, இப்போது தணிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2017 அக்டோபர் 6,  தமிழக ஆளுநரானார் பன்வாரிலால் புரோஹித். அடுத்த சில மாதங்களில் அவர் தன் ஆய்வுப் பயணத்தை தொடங்கினார். அரசு திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதா? நிர்வாகத்தில் தலையிட அவருக்கு அதிகாரம் ஏது? என்று கடும் எதிர்ப்பு காட்டியது திமுக. காஞ்சிபுரம், திருப்பூர், கோவை என ஆய்வு செய்து திட்டப் பணிகளை பார்வையிட்டார் பன்வாரிலால். எதிர்ப்பை புறந்தள்ளி மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அதிகாரிகள், உள்ளூர் அமைச்சருடன் ஆலோசனையும் நடத்தினார்.

இதனால், ஆவேசமடைந்த திமுக, ஆளுநர் ஆய்வு செய்யச் சென்ற இடங்களில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தருமபுரி, கடலூர் என ஆளுநரின் ஆய்வும், திமுகவின் ஆர்ப்பாட்டமும் தொடர்ந்த நிலையில், நாமக்கல்லுக்கு பன்வாரிலால் சென்றபோது பிரச்னை பெரிதானது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் கைதான நூற்றுக்கணக்கான திமுகவினர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திமுகவினரை விடுவிக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி நடந்த பிரம்மாண்ட பேரணி ஆளுநருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கடந்த ஆண்டு ஜூனில் அறிக்கை வெளியிட்டது ஆளுநர் மாளிகை. ஆளுநரின் ஆய்வை தவறான நோக்கில் மக்களிடம் எடுத்துரைப்பதாக ஸ்டாலினை விமர்சித்தது அறிக்கை.

அதன்பிறகு, ஆளுநரின் ஆய்வுகளும் திமுகவின் எதிர்ப்பும் குறைந்தே போயின. முக்கிய பிரச்னைகளில் ஆளுநரை ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நேரில் சந்தித்து ஆலோசித்த சம்பவங்களும் நடந்தன. இருதரப்பு சுமூக உறவின் அடுத்தகட்டமாக, ஆளுநர் - ஸ்டாலின் சந்திப்பு அமைந்துள்ளது. ஆளுநர் அளித்த விளக்கத்தை ஏற்று, திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக பொறுப்பேற்றது முதலே அவர் மீது திமுக காட்டிய எதிர்ப்பு இப்போது தணிந்து விட்டதா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சு நடத்த தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரவுள்ள நிலையில், திமுகவின் எதிர்ப்பைத் தணிக்க மத்திய அரசுதான் ஆளுநர் மூலம் இறங்கி வந்ததாக ஒரு கருத்து உள்ளது. அதேநேரம், மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு காட்டப்படும் தொடர் எதிர்ப்புகள், தமிழகத்தில் அக்கட்சி வளர காரணமாகி விடக்கூடாது என கருதியே திமுக பின்வாங்குவதாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com