Published : 17,Sep 2019 03:59 AM
மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை முகலிவாக்கத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி மண்டலப் பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நண்பனோடு ஆசையாய் கதை பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்ற 14 வயது சிறுவன் தீனா இன்று உயிரோடு இல்லை. சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற போதுதான் அந்த சோகம் நிகழ்ந்தது. தனம்நகரில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் கொண்டு செல்வதற்காக தோண்டிய பள்ளங்களை சரியாக மூடாததால், சாலையின் கீழே புதைக்கப்பட்டிருந்த மின் வயர் வெளியே வந்துள்ளது. அது தெரியாமல், பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்த சிறுவன் தீனா மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலே அந்த சிறுவன் உயிரிழந்தான். அதன் சிசிடிவி காட்சிகள் காண்போரை கலங்க வைக்கிறது.
இந்த சம்பவம் குறித்து மின்வாரியம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும், 2மணி நேரம் கழித்தே நிகழ்விடத்திற்கு வந்ததாக ஆதங்கப்படுகின்றனர் அந்த பகுதி மக்கள். சம்பவம் நடந்த இடத்தில், தெருவிளக்கிற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து ஒருமாதத்திற்கு மேலாவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். வீடுகளுக்கு செல்லும் மின் வயர்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டு, அதனால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.
இதற்கிடையில், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஆலந்தூர் மண்டல மின்வாரிய உதவி பொறியாளர்கள் செந்தில், பாலு ஆகியோர் மீது மாங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.