Published : 21,May 2017 03:20 AM
குட்: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு முதல்வர் பாராட்டு!

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த பெண்ணின் செயலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். சட்டக்கல்லூரி மாணவி. இவரது தந்தை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த குடும்பத்துக்கு, கணேசானந்தா தீர்த்தபாடம் என்கிற ஹரிசுவாமி (54) என்ற சாமியார் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்த அவரை நம்பினார் இளம்பெண்ணின் அம்மா. வீட்டில் அடிக்கடி பூஜை செய்தாராம் சாமியார்.
கடந்த 6 வருடமாக அந்த வீட்டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்த சாமியார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், அம்மாவிடம் சொன்னார். அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து சாமியாருக்கு நறுக் தண்டனை கொடுக்க முடிவு செய்தார் இளம்பெண். நேற்று முன்தினம் இரவில் சாமியார் பாலியல் வன்முறையில் இறங்கினார். கடுப்பான இளம்பெண், கத்தி ஒன்றை எடுத்து சாமியாரின் ஆணுறுப்பை ஓங்கி வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கதறிய சாமியார் அங்கிருந்து ஓடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்நிலையில் தானே தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டதாக அந்த சாமியார் தெரிவித்துள்ளார். இளம் பெண்ணின் இந்த துணிச்சல் காரியத்துக்கு பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ’இது துணிச்சலானது. பாலியல் வன்செயலில் ஈடுபட முனைவோருக்கு இது எச்சரிக்கை’ என்று கூறியுள்ளார். வரும் காலங்களில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இதுபோன்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.