Published : 14,Sep 2019 04:38 PM
அரசு மருத்துவர் Vs வழக்கறிஞர் மோதல் - திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை மருத்துவரும், வழக்கறிஞரும் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். 4 மாத கர்ப்பிணியான மனைவி பூவரசிக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்வதற்காக துரைமுருகன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முழு பரிசோதனைகள் முடிந்த நிலையில், மருத்துவர்களிடம் பூவரசியின் உடல்நிலை குறித்து துரைமுருகன் கருத்து கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாரதி என்ற மருத்துவர், துரைமுருகன் மற்றும் பூவரசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதை கவனித்த வழக்கறிஞர் தமிழ் அன்பு என்பவர், நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்கும்படி மருத்துவர்களிடம் பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த மற்றொரு மருத்துவர் தானேஸ்வரன், வழக்கறிஞர் தமிழ் அன்புவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்ததால், இருவரும் சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், பிற மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.