“எதிர்கால திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள்” - விஞ்ஞானிகள் மத்தியில் சிவன் பேச்சு

“எதிர்கால திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள்” - விஞ்ஞானிகள் மத்தியில் சிவன் பேச்சு
“எதிர்கால திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள்” - விஞ்ஞானிகள் மத்தியில் சிவன் பேச்சு

அடுத்து வரும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் கவனம் செலுத்துமாறு விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர். அதில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரனை நெருங்கிக்கொண்டிருந்த போது லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், லேண்டர் விக்ரமின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது விஞ்ஞானிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் மார்பில் சாய்ந்தபடி இஸ்ரோ தலைவர் சிவன் அழுதது அனைவரையும் நெகிழ வைத்தது.

இதையடுத்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் கிடப்பதாகவும், சேதமடையவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரோ நிலவிற்கு அனுப்பிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்து 3 நாள்கள் ஆன நிலையில், லேண்டரை இதுவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. வரும் 21ஆம் தேதிக்குள் தொடர்பை ஏற்படுத்தத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அடுத்து வரும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் கவனம் செலுத்துமாறு விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறிய போது, “இண்டர்நெல் நெட்வொர்க் மூலமாக எங்களுடைய தலைவர் பேசினார். சந்திரயான் 2 திட்டத்தைப் பொறுத்தவரை ஆர்பிட்டர் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது எனவும் லேண்டர் தொழில்நுட்பம் 95 சதவீதம் வெற்றியடைந்துள்ளது எனவும் கூறினார். லேண்டர் விக்ரமின் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து பகுப்பாய்வு குழு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். 

மேலும் சாஃப்ட் லேண்டிங்கிற்கு பதிலாக ஹார்ட் லேண்டிங் செய்திருக்கிறோம் எனவும் கவலை வேண்டாம். அடுத்து வரும் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் எனவும் அறிவுறுத்தினார்” எனத் தெரிவித்தார். விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மத்தியில் செப்டம்பர் 9 ஆம் தேதி இதனை பேசியதாக அந்த விஞ்ஞானி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com