Published : 10,Sep 2019 06:01 AM
‘ஸ்விகி கோ’ பெயரில் 95 ஆயிரம் மோசடி - அதிர்ச்சியில் பெங்களூரு பெண்

வாடிக்கையாளர் சேவை மையம் எனக் கருதி தவறான நம்பருக்கு தொடர்பு கொண்டதால் பெண் ஒருவர் 95ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
பிரபலமான உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விகி. இது ‘ஸ்விகி கோ’என்ற ஒரு புதிய சேவையை தொடங்கியதுள்ளது. இந்தச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் பொருட்களை நகரின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பலாம். இந்தியாவில் இந்தச் சேவை கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கப்பட்டது. சேவை தொடங்கிய முதல் நாளிலேயே பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் அபர்ணா தாக்கர் சூரி(47). இவர் தனது கைப்பேசியை விற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிலால் என்பவர் அபர்ணாவை தொடர்பு கொண்டு கைப்பேசியை வாங்க ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவரிடம் கைப்பேசியை கொண்டு சேர்க்க அபர்ணா ‘ஸ்விகி கோ’ சேவையில் பதிவு செய்துள்ளார். அவர் சரியான முகவரி அளிக்காததால் அந்தக் கைப்பேசி பிலாலிடம் சென்று சேரவில்லை.
இதனைத் தொடர்ந்து அபர்ணா ஸ்விகி கோ டெலிவரி நபரிடம் தொடர்பு கொண்ட போது அந்தக் கைப்பேசி ஸ்விகி அலுவலகத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அபர்ணா ‘ஸ்விகி கோ’ வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பேச திட்டமிட்டார். இதற்காக அவர் கூகுளில் வாடிக்கையாளர் சேவைக்கான தொலைபேசி என்னை தேடினார். அவருக்கு கிடைத்த தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
இந்தத் தொலைபேசியை எடுத்த நபர் அபர்ணா கைப்பேசிக்கு ஒரு லிங்க் வரும், அதன்மூலம் மற்றொரு ஆர்டர் செய்தால் அவரது கைப்பேசி உரிய இடத்தில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே அபர்ணா தனது கைப்பேசிக்கு வந்த லிங்க் மூலம் ஆர்டர் செய்ய முற்பட்டுள்ளார். அப்போது அபர்ணாவின் வங்கி கணக்கு விவரம் மற்றும் யுபிஐ ஐடி உள்ளிட்டவை கேட்கப்பட்டுள்ளது. இதனைக் கொடுத்த சிறிது நேரத்தில் அபர்ணாவின் வங்கி கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அபர்ணா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விகி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “அபர்ணா ஸ்விகியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைக்கவில்லை. அவர் வேறு ஒரு நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அளித்துள்ளார். எனவே இந்த அளவிற்கு பணத்தை இழந்துள்ளார்.
மேலும் அவர் கைப்பேசியை டெலிவரி செய்ய கொடுத்த முகவரி சரியாகவில்லை. அதனால் தான் நாங்கள் அந்தக் கைப்பேசியை டெலிவர் செய்யவில்லை. அவரிடம் சரியான முகவரி விவரம் பெற நாங்கள் முயற்சித்தோம். ஆனால் அவர் டெலிவரிக்காக பதிவு செய்த நம்பரை பயன்படுத்தாமல் தற்போது வேறு ஒரு நம்பரை பயன்படுத்தி வருகிறார். ஆகவே தான் எங்களால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஸ்விகி நிறுவனம் எப்போதும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரத்தை கேட்காது என்பதை மீண்டும் நான் தெளிவு படுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.