Published : 10,Sep 2019 02:46 AM

பப்ஜி விளையாடுவதைக் கண்டிப்பதா? அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்!

A-Karnataka-man-addicted-to-mobile-games-kills-father-who-objected-to-it

பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தையை தலையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவடத்தில் உள்ள காகதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா கும்பார் (60). ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவர் மகன் ரகுவீர் (21). டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தார். செல்போன் விளையாட்டான பப்ஜி-க்கு அடிமையான ரகுவீர், எப்போதும் அதையே ஆடி வந்துள்ளார். இதை அவர் தந்தை கண்டித் துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது. 

கடந்த ஞாயிறுக்கிழமை, செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கு பணம் கேட்டிருக்கிறார் ரகுவீர். பப்ஜி விளையாடுவதற்காகப் பணம் தரமாட்டேன் என்றார் சங்கரப்பா. ஆத்திரமடைந்த ரகுவீர், அக்கம்பக்கத்து வீட்டு ஜன்னலை கற்களால் தாக்கி உடைத்தார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரகுவீரை அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அன்று இரவும் நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த ரகுவீரை, சங்கரப்பா திட்டியதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த ரகுவீர், சங்கரப்பாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அவர் தலையை துண்டாக வெட்டி வீழ்த்திவிட்டு தப்பிவிட்டார். 

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, சங்கரப்பா உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரகுவீரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் ரகுவீர். 

பெற்ற மகனே அப்பாவை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்