
வேலூரைச் சேர்ந்த மணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி திருமண வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
வேலூர் வாலாஜாபேட்டையில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் டி.எஸ்.ராஜசேகரன். இவரது மகளின் திருமணம், நாளை மறுநாள் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணத்தில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜசேகரன் திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் தபால் வந்தது. அதில் பிரதமர் மோடி கையொப்பமிட்ட திருமண வாழ்த்து மடல் இருந்தது. அதில் ''என்னை திருமணத்துக்கு அழைத்தமைக்காக நன்றி. மணமக்களுக்கு வாழ்த்துகள்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரிடம் இருந்து வந்த வாழ்த்து செய்தி எதிர்பாரா மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மணமக்கள் மற்றும் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.