Published : 07,Sep 2019 04:44 AM
’இதுதான் எனது பந்துவீச்சு ரகசியம்’: சொல்கிறார் சாதனை மலிங்கா

எனது பந்துவீச்சு ரகசியம் சிக்கலானது அல்ல என்று இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா தெரிவித்தார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இலங்கையில் பல்லகலேவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியை சிதறடித்தார் மலிங்கா. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய அவர், தொடக்க ஆட்டக்காரர் முன்றோவை போல்ட் ஆக்கினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது நூறாவது விக்கெட். அடுத்த மூன்று பந்துகளில் ருதர்போர்ட், கிராண்ட்ஹோம், டெய்லர் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட் ஆக்கினார்.
இதன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். மீண்டும் ஐந்தாவது ஓவரில் செய்ஃபெர்ட்டையும் ஆட்டமிழக்க செய்தார். மலிங்கா 4 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். நியூசிலாந்து அணி 88 ரன்களில் ஆட்டமிழந்தது. இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மலிங்கா இதற்கு முன்பாக, 2007 உலகக் கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்கு பந்துகளில் 4 விக்கெட் சாய்த்திருந்தார். ஆப்கான் வீரர் ரஷித் கானும் டி20 போட்டியில் ஒருமுறை நான்கு பந்துகளில் 4 விக்கெட் எடுத்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் மலிங்கா இதுவரை 5 முறை ஹாட்ரிக் விக்கெட் சாய்த்துள்ளார்.
பின்னர் பேசிய மலிங்கா, ‘’இந்தப் போட்டியில் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான்கு பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியது பற்றி கேட்கிறார்கள். இரண்டாவது முறையாக நான் இப்படி விக்கெட் வீழ்த்தியிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த நான்கைந்து மாதங்களாக இலங்கைக்கு கடினமான நேரம். இந்த நேரத்தில் இலங்கைக்கு வந்து ஆடிய நியூசிலாந்து அணிக்கு நன்றி. எனது பந்துவீச்சு ரகசியம் பற்றி கேட்கிறார்கள். அதில் சிக்கல் ஏதுமில்லை. யார்க்கர்தான் எனது சிறப்பு. சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தினேன்’’ என்றார்.